MEDIA STATEMENTSELANGORSUKANKINI

கால்பந்து பள்ளித் திட்டம் அடுத்தாண்டு மீண்டும் தொடங்கும்- கணேசன் ராஜகோபால் தகவல்

ஷா  ஆலம், டிச 16– சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டிலான கால்பந்து பள்ளித் திட்டம் வரும் 2022 ஆம் ஆண்டிலும் தொடரும்.  அதிகமான புதிய பங்கேற்பாளர்களை இலக்காக கொண்ட இத்திட்டம் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்று அத்திட்டத்தின் தலைவர் கணேசன் ராஜகோபால்  கூறினார்.

இளம் விளையாட்டாளர்களிடையே கால்பந்து மீதான அறிவாற்றலை பெருக்குவது மற்றும் திட்டத்தின் தரத்தை உயர்த்துவது ஆகியவற்றோடு பயிற்றுநர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கால்பந்து பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பயிற்றுநர்களின் எண்ணிக்கையும் உயரும். இதன் வழி வலுவான பயிற்றுநர்கள் ஒருங்கமைப்பை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

ஒரு பள்ளிக்கு நான்கு பயிற்றுநர்கள் வீதம் 20 பள்ளிகளில் 80 பயிற்றுநர்களைக் கொண்டிருப்போம். ஆற்றலை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையும் மேலும் ஆக்ககரமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் அகப்பக்கம் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறந்த விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டிருக்கவில்லை எனக் கூறிய அவர், 12 வயது சிறார்களை கால்பந்து துறையில் ஆற்றல்மிக்கவர்களாக உருவாக்குவதை இது இலக்காகக் கொண்டிருக்கும் என்றார்.

பந்துடன் ஓடுவது, பந்தை உதைப்பது, கோல் புகுத்துவது, சக ஆட்டக்காரரை நோக்கி பந்தை லாவகமாக அனுப்புவது ஆகிய நுட்பங்கள் இந்த பயிற்சியில் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 5 பள்ளிகள் பங்கேற்றுள்ளன. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டம் அதிக பள்ளிகளின் பங்கேற்புடன் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.


Pengarang :