ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியில் 1,000 ஊக்கத் தடுப்பூசிகளுக்கு 6 மணி நேரத்தில் முன்பதிவு

ஷா ஆலம், டிச 16- சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 1,000 ஊக்கத் தடுப்பூசிகளுக்கு ஆறே மணி நேர்த்தில் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்த தடுப்பூசித் திட்டம் தொடர்பான தகவலை நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் தாங்கள் விளம்பரப்படுத்திய வேளையில் மாலை 3.00 மணிக்குள் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இணையம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு விட்டன என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா கூறினார்.

இத்திட்டத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு  ஊக்கத் தடுப்பூசியைப் பெற வேண்டியதன் அவசியத்தை பொது மக்கள் உணர்ந்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்வதற்கு தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

எனினும், மாநில அரசின் வசம் உள்ள தடுப்பூசி கையிருப்பை பொறுத்து இத்திட்ட அமலாக்கம் அமையும். போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லாத பட்சத்தில் இத்தொகுதியில் ஒரு முறை மட்டுமே இந்த தடுப்பூசி இயக்கம் நடத்தப்படும் என்றார் அவர்.

ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதிக்கான செல்வேக்ஸ் பூஸ்டர் இயக்கம் இம்மாதம் 30ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை டேவான் செர்பகுணா காம்ப்ளெக்ஸ் 3கே செர்டாங் ராயாவில் நடைபெறும்.


Pengarang :