ECONOMYHEALTHNATIONALSELANGOR

பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி- பத்தாங் காலி தொகுதி வழங்குகிறது

ஷா ஆலம், டிச 17- பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு அடுத்தாண்டு தொடங்கி மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டத்தை பத்தாங் காலி தொகுதி தொடங்கவுள்ளது.

பாலர் பள்ளியிலிருந்து ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 முதல் 100 மாணவர்களுக்கு இந்த உதவியை வழங்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 300,000 வெள்ளி மானியத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இது ஒரு புதுமையான திட்டமாக இல்லாவிட்டாலும் அத்தியாவசியமான திட்டமாக உள்ளது. முக்கு கண்ணாடியைப் பெறுவதற்கான வசதி இல்லாத காரணத்தால் கல்வி பாதிக்கப்படும் மாணவர்கள் நம்மிடையே உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தில் தங்களுடன் ஒத்துழைப்பதற்கு உள்ளூர் மூக்கு கண்ணாடி விற்பனையாளர்கள் முன்வந்துள்ளதாக சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வழி பயன் பெறுக்கூடிய மாணவர்களை கண்டறிவதில் தொகுதி சேவை மைய பணியாளர்கள், பெங்குளு மற்றும் கிராமத் தலைவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தாங் காலி தொகுதி மிகவும் பரந்த இடமாக உள்ளதால் இங்குள்ள மக்களால் உதவி கோரி தொகுதி சேவை மையத்திற்கு வர இயலாது. ஆகவே, அவர்களை தேடிச் சென்று அடையாளம் காணும் பணியில் நாங்கள் ஈடுபடவிருக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :