ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 1,073 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், டிச 23- ஊராட்சி மன்றங்கள் மற்றும் கும்புலான் டாருள் ஏசான் மேனேஜ்மென்ட் சென். பெர்ஹாட்  நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் டிசம்பர் 21 ஆம் தேதி வரை சிலாங்கூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 1,073 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

இந்த துப்புரவு பணியில் 457 குப்பைத் தோம்புகள் மற்றும் 25 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கே.டி.இ.பி.டபிள்யூ.எம். மற்றும் ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த 1,457 தொழிலாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சேதமடைந்த வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துப்புரவுப் பணியில் உதவ மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமிருடின் இன்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கிள்ளான், ஷா ஆலம், சிப்பாங் மற்றும் கோல லங்காட் பகுதிகளில் வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்காக தனது நிறுவனம் அனைத்து தளவாடங்கள் மற்றும் மனிதவளத்தையும் பயன் படுத்தும் என்று அதன் இயக்குனர் ரம்லி முகமது தாஹிர் வெள்ளத்திற்கு பிந்தைய துப்பரவு பணிக்குழுவின் தலைவர் இங் ஸீ ஹானுடன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசு வழங்கிய ஒரு மாத காலக்கெடுவுக்கு முன்னதாக அதாவது டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் பணிகளை  முடிக்க அந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

Pengarang :