ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தாமான் ஸ்ரீ மூடாவில் நேற்று 3,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், ஜன 1- வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் நேற்று சுமார் 3,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள லோரிகளின் எண்ணிக்கை 220 ஆக அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அகற்றப்படும் குப்பைகளின் அளவும் உயர்ந்துள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

நேற்று முன்தினம் மட்டும் 960 டன் குப்பைகளை அகற்றினோம். நேற்று இயந்திரங்கள் மற்றும் மனித ஆற்றல் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 3,000 டன் குப்பைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

எழரை டன் எடையுள்ள 220 லோரிகள் தவிர்த்து 10 டன் எடைகொண்ட 32 லோரிகளையும் நாங்கள் வாடகைக்கு அமர்த்தியுள்ளோம். இது தவிர, 38 குப்பை அள்ளும் இயந்திரங்களும் 400 தொழிலாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா பகுதி மிகவும் பரந்த பரப்பளவைக் கொண்டிருப்பதால் அப்பகுதி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனியாக ஒரு குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் சொன்னார்.

இதுவரை இப்பகுதியிலிருந்து 50 விழுக்காட்டு குப்பைகளை அகற்றியுள்ளோம். இன்னும் ஒரு வார காலத்தில் குப்பைகளை அகற்றும் பணி முழுமை பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.


Pengarang :