ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சுபாங் ஜெயா மக்களுக்கு யுஎஸ்ஜே 1 செல்கேர் கிளினிக்கில் பூஸ்டர் தடுப்பூசி

சுபாங் ஜெயா, ஜன 13- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை இங்குள்ள யு.எஸ்.ஜே. 1 செல்கேர் கிளினிக்கில் பெற்றுக் கொள்ளுமாறு சுபாங் ஜெயா தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

எனினும், இந்த தடுப்பூசியைப் பெற விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதோடு தங்களுக்கு அழைப்பு வரும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸி கூறினார்.

சுபாங் ஜெயா வட்டாரத்தில் செல்கேர் கிளினிக் உள்ளதால் இத்தொகுதியில் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள தாங்கள் திட்டமிடவில்லை எனக் கூறிய அவர், ஆர்வமுள்ளோர் இந்த கிளினிக்கிற்கு நேரில் சென்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

அதிகமானோர் தடுப்பூசி பெறுவதற்கு வரமாட்டார்கள் என்ற அச்சம் காரணமாக பெரிய அளவில் தடுப்பூசி இயக்கத்தை நாங்கள் இங்கு மேற்கொள்ளவில்லை. தொகுதி அலுவலங்களில் இதற்கான விண்ணப்பத்தை செய்தவர்களிடம் செல்கேர் கிளினிக் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ஊக்கத் தடுப்பூசி வழங்குவதற்காக மாநில அரசு 157,000 தடப்பூசிகளை ஏற்பாடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 7 ஆம் தேதி கூறியிருந்தார்.

இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர்  தெரிவித்தார். 


Pengarang :