HEALTHMEDIA STATEMENTNATIONAL

2021 ஆம் ஆண்டில் நாட்டில் 26,365 டிங்கி சம்பவங்கள் பதிவு- நோர் ஹிஷாம் தகவல்

கோலாலம்பூர், ஜன 31- மலேசியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 26,365 டிங்கி காய்ச்சல் சம்பவங்க் பதிவாகின. கடந்த 2020 இல் 90,304 ஆக இருந்த டிங்கி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 70.8 விழுக்காடு குறைவானதாகும்.

கடந்த பத்தாண்டு காலத்தில் டிங்கி நோய் சம்பவங்கள் மிகவும் குறைந்த அளவில் பதிவானது இதுவே முதன் முறையாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

டிங்கி காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட மரணச் சம்பவங்களின் எண்ணிக்கையும் கடந்தாண்டு குறைந்துள்ளதாக அவர் சொன்னார். கடந்த 2020 இல் 145 ஆக இருந்த மரண எண்ணிக்கை கடந்தாண்டு 20ஆக குறைந்துள்ளது என்றார்.

டிங்கி சம்பவங்கள் குறைந்ததற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் தீவிரமாக இருந்த போதும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் நோயாக டிங்கி விளங்கியது என அவர் தெரிவித்தார்.

நேற்று அனுசரிக்கப்பட்ட அனைத்துலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

கடந்த 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வு கண்டதை சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுவதாக நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

மலேசியாவைப் பொறுத்த வரை நான்கு முதல் ஐந்து ஆண்டு சுழல் முறையில் இந்நோய் உயர்வு காணும் என கணிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

வரும் 2024 மற்றும் 2025 இல் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் பதிவானதை விட அதிக எண்ணிக்கையில் டிங்கி சம்பவங்கள் மேற்கண்ட ஆண்டுகளில் பதிவாகும் என்றார் அவர்.


Pengarang :