MEDIA STATEMENTSELANGOR

ஓப்ஸ் செலாமாட்- சிலாங்கூரில் 1,592 சாலை விபத்துகள் பதிவு

ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் மாநில போலீசார் யேற்கொண்டு வரும்  ஓப்ஸ் செலாமாட் 17 சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது 1,592 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் நேற்று வரையிலான காலக்கட்டத்தில் இந்த விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது கூறினார்.

கடந்தாண்டு ஓப்ஸ் செலாமாட் 16 இயக்கத்தின் போது பதிவானதை விட இம்முறை 31.2 விழுக்காடு அல்லது 721 சம்பவங்கள் குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டு விழாக்காலத்தில் 2,313  விபத்துகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் அல்லது உயிருடற்சேதம் சம்பந்தப்படாத விபத்துகளின் எண்ணிக்கை 1,565 ஆக குறைந்துள்ளதை தரவுகள் காட்டுவதாக அர்ஜுனைடி குறிப்பிட்டார்.

கடுமையில்லாத விபத்துகளின் எண்ணிக்கை 15 ஆகவும் மரண விபத்துகளின் எண்ணிக்கை 10 ஆகவும் பதிவானதாக அவர் சொன்னார்.

அதிக விபத்துகள் நிகழும் இடங்களில் தினமும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய எட்டு இடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 6 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த ஓப்ஸ் செலாமாட் நடவடிக்கையில் போக்குவரத்து போலீஸ் துறையைச் சேர்ந்த 300 அதிகாரிகளும் வீரர்களும் பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :