ANTARABANGSAHEALTHMEDIA STATEMENTNATIONAL

இனங்களுக்கிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதில் பாரம்பரிய விழாக்கள் உதவி- ஷா ஆலம் எம்.பி. காலிட் சமாட் உரை

ஷா ஆலம், பிப் 13- மலேசியாவில் இன சகோதரத்துவம் மற்றும் நட்புறவை வளர்ப்பதில் பாரம்பரிய விழாக்கள் பெரிதும் துணை புரிவதாக ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சமாட் கூறினார்.

தொடக்க காலம் முதல் இத்தகைய விழாக்களை ஒன்றிணைந்து கொண்டாடும் மனப்போக்கு மலேசியர்களிடம் இருந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

அறுவடைத் திருநாளான பொங்கல்  முன்பு அவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. எனினும், தற்போது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்நிகழ்வு  வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இது போன்ற விழாக்களை முன்பு தொடங்கி இப்போது வரை அனைவரும் ஒன்றாக கொண்டாடி வருகிறோம். இதன் மூலம் நாட்டிலுள்ள பல்லின மக்களிடையே சகோரத்துவத்தையும் நட்புறவையும் வளர்ப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள கெம் ரிம்பா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் கலை,கலாசார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பாரம்பரிய கலை, கலாசார போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த விழாவை ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 5 வது மண்டலப் பிரிவு ஆலய நிர்வாகத்திடன் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தியது.

இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் எஸ்.பி. சரவணன் மற்றும் ஆலயத் தலைவர் டத்தோஸ்ரீ குணசேகரன் மற்றும் ஆலய நிர்வாகத்தினரையும் அவர் பெரிதும் பாராட்டினார்.

இந்த கென் ரிம்பா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை காப்பாற்றுவதற்கு நடத்தப்பட்ட போராட்டத்தில் தாமும் பங்கேற்றதை  காலிட் சமாட்  தமதுரையில் நினைவுக்கூர்ந்தார்.

ஷா ஆலம் பாடாங் ஜாவா பகுதியில் அமைந்திருந்த இந்த ஆலயத்தை உடைப்பதற்கு கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியில்  அப்போதைய பாரிசான் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் வழி வகுத்தது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட  பாரம்பரிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காலிட் சமாட் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவும் இந்த நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்தார்.

 


Pengarang :