ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி- மாநில அரசு பரிசீலனை

ஷா ஆலம், பிப் 15- குறிப்பிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக ஆக்கும் பரிந்துரையை பரிசீலிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

நேற்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தடவைக்கான பெருந்தொற்று மேலாண்மை எனும் சிலாங்கூர் அரசின் பாதுகாப்பு பணிக்குழு சிறப்பு கூட்டத்தில் இதன் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முன்னேற்பாடாக, ரமலான் சந்தைகள் மற்றும் பள்ளிவாசல் நடவடிக்கைகள் தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஒ.பி.) அமலாக்கம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உயர்ந்தபட்ச எஸ்.ஒ.பி. விதிமுறைகளுடன் ரமலான் சந்தை மற்றும் பள்ளிவாசல் தொழுகைகள் நடைபெறுவதை உறுதி செய்ய ஊராட்சி மன்றங்களும் சிலாங்கூர் மாநில சமய இலாகாவும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கடைபிடிப்பதற்கு இந்த கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது என்று அவர் சொன்னார்.

உருமாற்றம் கண்ட கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் விளக்களிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் குறிப்பாக, உயர்கல்விக் கூடங்களில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றார் அவர்.

 


Pengarang :