ECONOMYPENDIDIKANSELANGOR

சிடிக் பட்சில் சிந்தனைக் கழகம் உருவாக்கம்- யுனிசெல் நிதி ஒதுக்கீடு 40 லட்சம் வெள்ளியாக அதிகரிப்பு

ஷா ஆலம், பிப் 17- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் சிடிக் பட்சில் சிந்தனை மற்றும் தலைமைத்துவ கழகத்தை உருவாக்கும் பணியை முழுமைப்படுத்தும் நோக்கத்திற்காக  அந்த உயர்கல்விக் கூடத்திற்கு கூடுதலாக 40 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த இலக்கியவாதியின் படைப்புகளை மொழி பெயர்ப்பதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 10 லட்சம் வெள்ளி தவிர்த்து கூடுதலாக இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் நான் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்துடன் பேச்சு நடத்தியுள்ளேன். அவர்களும் மேலும் 40 லட்சம் வெள்ளியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் வழி அந்த உயர்கல்விக் கூடத்திற்கு ஒதுக்கப்படும் தொகை 50 லட்சம் வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.

இங்குள்ள யுனிசெல் வளாகத்தில் இன்று அந்த சிந்தனைக் கழகம் மற்றும் புத்தக வெளியீட்டுக்குத் தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மலாய் மொழி மற்றும் இஸ்லாமிய சமயத்தின் மேன்மைக்கு அரும்பங்காற்றிய அந்த கல்விமானை கௌரவிக்கும் வகையில் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தனது 40 ஆண்டுகால இஸ்லாமிய சமய பரப்புரையில் நேர்மறையான பண்புகளை வெளிப்படுத்திய அந்த அறிஞரின் சிந்தனை பாணியை பெரிதும் பாராட்டிய அமிருடின் அவரை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றார்.

எழுபதாம் ஆண்டுகளில் மலாயா பல்கலைக்கழக மலாய் மாணவர் சங்கத் தலைவராகவும் அபிம் மற்றும் வாடா அமைப்புகளின் தலைவராக பொறுப்பு வகித்த சடிக் பட்சில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி காலமானார்.


Pengarang :