HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பின் போது எல்லைகளைத் திறப்பது ஆபத்தானது- நிபுணர் கருத்து

ஷா ஆலம், பிப் 21– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் போது நாட்டின் எல்லைகளை மறுபடியும் திறப்பது சரியான முடிவாக இருக்காது என்று மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இச்செயல் நோய்த் தொற்று எண்ணிக்கை மேலும் உயர்வு காண்பதற்கு வழி வகுக்கும் என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டாக்டர் ரோஸ்னா சுதன் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கு இந்நடவடிக்கை அவசியமானதாக இருந்தாலும்  சுகாதார நிர்வாகத் திறனும் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் தொற்று பரவல் காரணமாக கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமின்றி மக்களின் அலட்சியப் போக்கும் இந்த எண்ணக்கை உயர்வுக்கு காரணமாக உள்ளது. நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் பட்சத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையை கையாளும் திறன் சுகாதாரத் துறைக்கு இல்லாது போய்விடுமோ என அஞ்சுகிறோம் என்றார் அவர்.

இது தவிர, நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு எண்டமிக் கட்டத்திற்கு மாறும் நமது முயற்சிகளை தாமதப்படுத்தும் என்பதோடு மருத்துவம், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உண்டாகும் சுகாதாரச் செலவினங்களும் அதிகரிக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார்.

அனைத்துலக எல்லைகளைத் திறப்பதன் அவசியத்தை நாம் மறுப்பதற்கில்லை. ஆயினும், அம்முடிவை எடுப்பதற்கு முன்னர் உள்நாட்டில் நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று பெரித்தா ஹரியான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :