ANTARABANGSASUKANKINI

மதிப்புமிகு விளையாட்டு நிகழ்வுகள் சிலாங்கூரின் கௌரவத்தை உயர்த்த உதவும்- கைரிருன் ஓத்மான்

ஷா ஆலம், பிப் 21-  அண்மையில் நடந்து முடிந்த 2022 ஆசிய குழு நிலையிலான பூப்பந்து போட்டி போன்ற மதிப்புமிக்க போட்டிகள் சிலாங்கூர் மாநிலத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரபலமடையச் செய்யும்.

இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக விளையாட்டுகளை பிரபலப்படுத்தும் அதேவேளையில் பல்லின, சமய மற்றும் கலாசார பின்னணியைக் கொண்ட மக்களை ஒன்றுபடுத்தவும் இயலும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

சிலாங்கூர் பங்கிட் உணர்வின் அடிப்படையில் ஆசிய பூப்பந்து போட்டி போன்ற நிகழ்வுகளை நடத்துவதன் வழி விளையாட்டுகள் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கவும் மக்களை ஒன்றுபடுத்தவும் சிலாங்கூரின் பெயரை அனைத்துலக நிலையில் பிரபலப்படுத்தவும் இயலும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்கு நடைபெற்ற இந்த போட்டியில் எட்டு நாடுகளைச் சேர்ந்த 147 விளையாட்டாளர்கள் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போட்டியில் கலந்து கொண்ட நாடுகளில் ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா, இந்தியா, ஹாங்காங், சிங்கப்பூர், கசகஸ்தான் மலேசியா ஆகிய நாடுகளும் அடங்கும் என்றார் அவர்.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வாகை சூடிய மலேசிய அணிக்கும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்தோனேசியாவுக்கும் தாம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :