HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த கர்ப்பிணிகளில் 79 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறாதவர்கள்

கோலாலம்பூர், பிப் 21– கடந்தாண்டில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய பாதிப்புகளால் உயிரிழந்த 191 கர்ப்பிணி பெண்களில் 79 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெறாதவர்கள் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கர்ப்பிணிகள் சம்பந்தப்பட்ட அனைத்து மரணச் சம்பவங்களும் நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவியது முதல் பதிவானவை என்று அவர் சொன்னார். மரணமடைந்தவர்களில்  83 விழுக்காட்டினர் இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கர்ப்பிணி பெண்களைப் சம்பந்தப்படுத்திய கோவிட்-19 நோய்த் தொற்று மரணச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று என்று அவர் சொன்னார். 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 95.7 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கர்ப்பிணி பெண்கள் மரணங்கள் நேர்வது இதனால் குறைந்துள்ளது என்றார் அவர்.

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கடந்த ஜனவரி வரையிலானக் காலக்கட்டத்தில் 18,277 கர்ப்பிணி பெண்கள் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :