SELANGORSUKANKINI

நீரிழிவு நோய்க்கு எதிரான சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் இயக்கத்திற்கு ராஜா மூடா ஆதரவு

ஷா ஆலம், பிப் 23- சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து குழு ஏற்பாடு செய்திருக்கும் நீரிழிவு நோய்க்கு எதிரான பிரசார இயக்கத்திற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா ஆதரவு தெரிவித்துள்ளார்.

அனைவரும் உடல் நலம் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்பதோடு உணவில் சீனியை அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று காணொளி வாயிலாகத் தெங்கு அமீர் ஷா இப்னி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கேட்டுக் கொண்டார்.

மானுட வாழ்வில் மிகவும் விலைமதிக்க முடியாதது உடல் ஆரோக்கியம் ஆகும். உடல் ஆரோக்கியத்தை வாங்கவோ விற்கவோ முடியாது என்பதால் அதனை முறையாகப் பேணி காக்க வேண்டும் என அன்பிற்குரிய அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

கடுமையான நோய்களில் ஒன்றாக நீரிழிவு விளங்குகிறது. இந்நோய் நீண்ட நாட்களாகவே நமது வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்நோயினால் இருதயப் பாதிப்பு, பக்கவாதம் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் ஏற்படுகின்றன. என்று தனது  சிலாங்கூர் எஃப்.சி.யின் பேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்தார்.

அந்த ஆட்கொல்லி நோயை எதிர் கொள்வதற்கான வழிவகைகளை மக்கள் தெரிந்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், அன்றாட உணவு விஷயத்தில் யாரும் அலட்சியம் காட்டக்கூடாது என்றார்.

நோய் வந்தப் பின்னர் சிகிச்சை பெறுவதை விட நோய் வராமல் தடுப்பதே மேல் என்ற கருத்துக்கேற்ப நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவு முறையைக் கடைபிடிப்போம். அடிக்கடி உடற்பயிற்சி மேற்கொள்ளும் அதே வேளையில் உடல் நிலை குறித்து மாதந்தோறும் சோதனை மேற்கொள்வோம் என்றார் அவர்.

மலேசியர்கள் மத்தியில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இயக்கத்தை மருந்து நிறுவனமான சோனாஃபி அவென்ந்தியுடன் இணைந்து சிலாங்கூர் எஃப்.சி. மேற்கொண்டு வருகிறது.


Pengarang :