ECONOMYNATIONAL

மூடாக் கட்சியுடன் ஒத்துழைப்பதை நிறுத்துவீர்- சிலாங்கூர் கெஅடிலான் வலியுறுத்து

ஷா ஆலம், பிப் 25- ஹராப்பான் கூட்டணிக்கும் மூடா எனப்படும் மலேசிய ஜனநாயகக் கட்சிக்குமிடையிலான ஒத்துழைப்பு முறித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலக் கெஅடிலான் வலியுறுத்தியுள்ளது.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் மூடாக் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் ஹராப்பான் கூட்டணி தனது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தகவல் பிரிவுத் தலைவர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

லார்க்கின் தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தும் மூடாக் கட்சியின் நடவடிக்கை கெஅடிலான் மற்றும் ஹராப்பான் கூட்டணிகளுடனான ஒத்துழைப்பை அக்கட்சி மதிக்காததைக் காட்டுகிறது என்று அவர் சொன்னார்.

ஹராப்பான் கருத்து இணக்கத்தின் பேரில் லார்க்கின் தொகுதியில் கெஅடிலான் வேட்பாளரை நிறுத்தியுள்ளதை அனைவரும் அறிவர். தனது சொந்த வேட்பாளரை அத்தொகுதியில் நிறுத்தும் மூடா கட்சியின் நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் வாக்குப் பிரித்து தேசிய முன்னணிக்கு  சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றார் அவர்.

இத்தேர்தலில் கெஅடிலான் மற்றும் ஹராப்பான் கூட்டணி இயந்திரம் முழு அளவில் முடுக்கி விடப்பட்டுத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதோடு கொள்ளையர்கள், ஊழல் பேர்வழிகள், துரோகிகள் மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றாமலிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

லார்க்கின் தொகுதியில் கெஅடிலான் கட்சி சார்பில் டாக்டர் ஜமில் நஜ்வா அர்பாய்ன் போட்டியிடும் வேளையில் அதே தொகுதிக்கு மூடாக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ரஷிட் அபு பாக்காரை வேட்பாளராக அக்கட்சி தலைவர்  சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் அறிவித்தார்.


Pengarang :