ECONOMYSELANGOR

அடுத்த மாதம் சட்டமன்றத்தில் சாலை பழுதுபார்ப்பு நிதி கோரிக்கை உள்ளிட்ட தீர்மானங்கள் தாக்கல்

சபா பெர்ணம், பிப் 28- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மானங்களில் அண்மைய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான 20 கோடி வெள்ளி கூடுதல் நிதி கோரிக்கையும் அடங்கும்.

வெள்ளத் தடுப்புச் சுவர்கள் மற்றும் மலைச்சாரல்களைச் சீரமைப்பது உள்பட மூன்று விதமான நிதிக் கோரிக்கைகளுக்கு மாநில அரசு இதுவரை ஒப்புதல் அளித்துள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

குறுகிய கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பல சீரமைப்பு பணிகள் முற்று பெற்று விட்டன. வெள்ளத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா, சிப்பாங், கிள்ளான், கோம்பாக், கோலச் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் இப்பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன என்றார் அவர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை பெய்த அடை மழையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த வெள்ளப் பேரிடர் காரணமாகப் பொதுமக்களுக்குப் பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டதோடு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடக்கியது.  இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பொருட் சேதம் ஏற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் வழங்கப்பட்டன.


Pengarang :