ECONOMYHEALTHNATIONAL

தடுப்பூசி பக்க விளைவுகளுக்கு சுயமாக சிகிச்சையளிக்க முயலாதீர்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 28- சந்தைகளில் பாராசிட்டமோல் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, ஊக்கத் தடுப்பூசி பெறுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளுக்கும் கோவிட்-19 தொற்று அறிகுறியிலிருந்து விடுபடுவதற்கும் பொது மக்கள் சுயமாக சிகிச்சைப் பெறுவதில் முனைப்பு காட்டத் தொடங்கி விட்டார்களே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள் அல்லது மருந்தாளர்களின் ஆலோசனையைப் பெறாமல் சொந்தமாக பாராசிட்டமோல் மருந்துகளை வாங்குவது கவலையளிப்பதாக உள்ளதோடு அதிகப்படியாக மருந்தை எடுப்பதால் உடலில் விஷத்தன்மை ஏற்படுவதற்குரிய அபாயமும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தற்போது நிலைமை கைமீறி போய் விட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் பேட்டி கண்ட மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்கள் கூறினர்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் இந்த நோய்த் தொற்றால் ஏற்படக்கூடிய காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான பாதிப்புகளுக்கு பாராசிட்டமோல் மருந்தை உட்கொண்டால் சரியாகிவிடும் மக்களின் கணிப்பு ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்தும் பட்சத்தில் காய்ச்சல், தலைவலி மற்றும் மூட்டு வலி ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் பாராசிட்டமோல் மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்கின்றனர் என்று மருந்தாளர்கள் தெரிவித்தனர்.

உடல் வலி மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு பாராசிட்டமோல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. பாராசிட்டமோல் அடங்கிய பெனடோல் மாத்திரைகள் நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற வலி நிவராணியாக விளங்குகிறது.


Pengarang :