ECONOMYNATIONAL

பேங்க் நெகாராவில் ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம்- நாடாளுமன்றத்தில் விவாதிக்க அன்வார் தீர்மானம் தாக்கல்

ஷா ஆலம், பிப் 28-  ஒன் மலேசிய டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1எம்.டி.பி.) ஊழலைத் தொடர்ந்து மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தாக்கல் செய்தார்.

கோல்ட்மென் சாக்ஸ் குரூப் இன்காப்ரேட் நிறுவனத்தின் முன்னாள் தென்கிழக்காசியப் பிரிவுக்கான தலைவர் திம் லீஸ்னர் அண்மையில் அமெரிக்க நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் பேங்க் நெகாரா மலேசியாவைத் தொடர்பு படுத்தியிருந்தது தொடர்பான இந்தத் தீர்மானத்தை அவர் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ அஸஹார் அஸிசான் ஹருணிடம் சமர்ப்பித்தார்.

இந்த ஊழல் விவகாரம் இப்போது உலகம் முழுவதும் அம்பலமாகி விட்டதால் இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அன்வார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பொது மக்கள் நலன் சம்பந்தப்பட்டுள்ளதால் இதனை மக்களவை விரிவாகவும் ஆழமாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பணப் பரிமாற்றத்தில் சம்பந்தப்பட்ட மலேசியர்கள் யாரையும் அடையாளம் கண்டு விசாரித்துக் குற்றஞ்சாட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தவறி விட்டதாவும் அவர் குறிப்பிட்டார்.

1எம்.டி.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான 100 கோடி அமெரிக்க டாலரைப் பெட்ரோசவுதி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு மாற்றப் பேங்க் நெகாரா அனுமதி வழங்கியதாகத் திம் லீஸ்னர் தனது சாட்சியத்தில் கூறியிருந்தார்.


Pengarang :