ECONOMY

பண மோசடி வழக்கில் வினோத் குற்றவாளி எனத் தீர்ப்பு- 3 ஆண்டுச் சிறை, வெ. 11.4 லட்சம் அபராதம்

ஷா ஆலம், மார்ச் 1– பெண்மணி ஒருவருக்குச் சொந்தமான 17 லட்சத்து 98 ஆயிரத்து 732 வெள்ளி 59 காசை மோசடி செய்தது மற்றும் அவருக்குச் சொந்தமான பணத்தை மறைத்தது ஆகிய குற்றங்கள் தொடர்பில் முன்னாள் அச்சக உரிமையாளர் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டுச் சிறை மற்றும் 11 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

எஸ்.வினோத் (வயது 33) என்ற அந்த ஆடவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்கள் இருப்பதை எதிர்த்தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி யாங் ஜாய்மெய் யாங் கசாலி தனது தீர்ப்பில் கூறினார்.
பணத்தை மறைத்த குற்றத்திற்காக ஈராண்டுச் சிறை மற்றும் 420,000 வெள்ளி அபராதம், பண மோசடி குற்றத்திற்காக  மூன்றாண்டுச் சிறை மற்றும் 720,000 வெள்ளி அபராதம் விதித்த நீதிபதி, சிறைத்தண்டனையை இன்று தொடங்கி ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் அவர் மேலும் ஈராண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

62 வயதான பெண்மணி ஒருவருக்குச் சொந்தமான 17 லட்சத்து 98 ஆயிரத்து 732 வெள்ளி 59 காசு தொகையை தவறான தகவல்கள் மூலம் நம்ப வைத்து தனது ஃபைவ் எலிமெண்ட்ஸ் செர்விசஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததாக வினோத் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி ஷா ஆலம் செக்சன் 9, ஹோங் லியோங் இஸ்லாமிக் பெர்ஹாட் நிறுவனத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக வினோத் தண்டனைச் சட்டத்தின் 424வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
ஃபைவ் எலிமெண்ட்ஸ் நிறுவனத்திலிருந்து முறையே வெ. 85,000 மற்றும் வெ. 144,000 தொகையை பிறரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலும் வினோத் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

இதனிடையே, ஹோங் லியோங் வங்கியில் வைப்புத் தொகைக்கு 4.38 விழுக்காட்டு வட்டித் தொகை வழங்கும் சலுகை திட்டம் உள்ளதாக பாதிக்கப்பட்ட மூதாட்டியை நம்ப வைத்து ஏமாற்றிய குற்றத்திற்காக வினோத்தின் அத்தையான எம். மணிமாலா (வயது 47) என்ற மாதுவுக்கு 5 ஆண்டுச் சிறை மற்றும் 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.


Pengarang :