ECONOMYSELANGOR

ஷா ஆலமில் பூங்கா அடிப்படையில் புதிய நிர்வாக மையம்- பி.என்.எஸ்.பி. நிர்மாணிக்கிறது

ஷா ஆலம், மார்ச் 2- பூங்கா மத்தியில் அலுவலகம் எனும் கோட்பாட்டில் ஷா ஆலம் நகரில் புதிய கட்டிடத் தொகுதியைச் சிலாங்கூர் அரசின் மேம்பாடுகரமான பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (பி.என்.எஸ்.பி.) உருவாக்கவுள்ளது.

ஷா ஆலம் மாநகரின் புதிய அடையாளச் சின்னமாக விளங்கக்கூடிய இந்தக் கட்டிடத் தொகுதி இங்குள்ள செக்சன் 5 பகுதியில் 90.21 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படும்.

இந்தத் திட்டம் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் முதலாவது கட்டப் பணிகள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் முற்று பெறும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ராஜா அகமது ஷாரிர் இஸ்கந்தர் ராஜா சலீம் கூறினார்.

மாநில அரசு நிர்வாக அலுவலகங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தை நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் நவீன நகரத்தில் மேற்கொள்வது மிகவும் பொருத்தமானதாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார்.

மாநில அரசு தலைமைச் செயலகமான சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்திற்கு அருகில் உருவாக்கப்படும் இந்த திட்டத்தில் வர்த்தக கட்டிடங்களும் கொண்டோமினியம் எனப்படும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளும் இடம் பெறும் என்றார் அவர்.

இத்திட்டம் முழுமைபெற சிறிது காலம் பிடிக்கும். 30 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் முதலாவது கட்டப் பணியில் அரசாங்க மற்றும் அரசு சார்பு நிறுவன கட்டிடத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்தத் திட்டம் பூர்த்தியானவுடன் மாநில அரசின் புதிய நிர்வாக மையமாக இக்கட்டிடத் தொகுதி மாறும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அரசு துறைகள் மற்றும் அரசச் சார்பு நிறுவனங்களின் அலுவலகங்களின் மைய இடமாக இது செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :