ECONOMYNATIONAL

வெ. 13,900 கோடி வரி வசூலிப்பு இலக்கை இவ்வாண்டு அடைய முடியும்- வருமான வரி வாரியம் நம்பிக்கை

கோலாலம்பூர், மார்ச் 2– இவ்வாண்டில் 13,900 கோடி வெள்ளி வரியை வசூலிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியும் என்று உள்நாட்டு வருமான வரி வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது.

வருமான வரி வாரியம் ஏற்பாடு செய்துள்ள அனைத்துச் சேவைகளும் முழுமையாக அமல்படுத்தப்படுவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று அவ்வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முகமது நிஸோம் சைரி கூறினார்.

இந்த இலக்கை அடைவதற்கு நாங்கள் தீவிரமான அணுகுமுறையைக் கையாளவுள்ளோம். அதே சமயம், வரி செலுத்துவோருக்குத் தேவையான பிரத்தியேகச் சேவைகளையும் ஏற்பாடு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

வரி செலுத்துவோருக்கு தேவைப்படும் அனைத்து சேவைகள் மற்றும் உதவிகள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்வதுதான் நமது கடமையாகும். குறிப்பிட்ட தேதியில் தொகை செலுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதை நாம் கண்காணித்து வருவோம் என்றார் அவர்.

நாட்டின் பொருளாதாரம் மீட்சி கண்டு வரும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியும் என நம்புகிறோம். இன்னும் சொல்லப்போனால், நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக வசூலிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பெர்னாமா டிவி ஏற்பாட்டில் “வருமானம் நாட்டிற்கு வளப்பத்தையும் மலேசியக் குடும்பத்திற்குச் சுபிட்சத்தையும் கொண்டு வரும்“ எனும் தலைப்பிலான நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனைக் கூறினார்.

 


Pengarang :