ECONOMYHEALTHNATIONAL

முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு அலவன்ஸ்- சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும்

கோலாலம்பூர், மார்ச் 2- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தகுதி வாய்ந்த முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குவது தொடர்பான ஷரத்துகளைச் சுகாதார அமைச்சு அவ்வப்போது மறுஆய்வு செய்து மேம்படுத்தும்.

சிறப்பு ஊக்கத் தொகையைப் பெறுவதற்குத் தகுதி உள்ள மருத்துவர்கள், தாதியர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தவிர்த்து அந்த நோய்த் தொற்றைக் கையாளும் பணியில் இதர தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சிறப்பு ஊக்கத் தொகையைப் பெறும் தகுதியைப் பெற்றுள்ள தரப்புகளின் விபரங்கள் தொடர்ந்தார்போல் மேம்படுத்தப்படும். உதாரணத்திற்குக் கோவிட்-19 நோயாளிகளுக்கு நீண்ட காலத்திற்குச் சிகிச்சையளிக்கும் பணியை மேற்கொண்டு வரும் பிஸியோதொராப்பி நிபுணர்களும் இந்த ஊக்கத் தொகையைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

நாடாளுமன்றத்தில் இன்று தம்பின் உறுப்பினர் டத்தோ டாக்டர் ஹசான் பாஹ்ரோம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகை குறித்து டாக்டர் ஹசான் கேள்வியெழுப்பியிருந்தார்.

கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை முன்களப் பணியாளர்களுக்கு 110 கோடி வெள்ளி சிறப்பு அலவன்சாக வழங்கப்பட்டுள்ளதாக கைரி குறிப்பிட்டார்.


Pengarang :