ECONOMYNATIONAL

ஜோகூர் தேர்தல்- அம்னோ கோட்டைகளைக் கெஅடிலான் ஊடுருவ முடியும்- அன்வார் நம்பிக்கை

மூவார், மார்ச் 3- ஜோகூர் மாநிலத் தேர்தலில் அம்னோவின் கோட்டைகளாக விளங்கும் தொகுதிகளைக் கெஅடிலான் கட்சியினால் ஊடுருவ முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அம்னோவின் பலம் வாய்ந்த கோட்டைகளாகக் கருதப்பட்ட பல தொகுதிகளை எதிர்க்கட்சிகள் இதற்கு முன்னர்க் கைப்பற்றியதன் அடிப்படையில் இந்த வெற்றி அசாத்தியமான ஒன்றல்ல என்று கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.

ஆயினும், மக்களுக்குத் தெளிவான விளக்கத்தை எடுத்துரைக்கும் பணியில் கட்சி தேர்தல் இயந்திரம் கடுமையாகப் பாடுபட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.

அது வலுவான கோட்டை, இது வலுவான கோட்டை அல்ல என்று நாம் கருதிக் கொள்ளக்கூடாது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் முக்கியமானதாகும். நாம் அதிகப் பணியாளர்களைப் பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரத்தில் திருப்தியடைகிறீர்களா? என்று என்னைக் கேட்டால் இன்னும் போதாது என்றுதான் நான் கூறுவேன். இன்னும் தீவிரமாகக் களத்தில் இறங்கி நமது வேட்பாளர்களுக்காகப் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அம்னோவின் பலம் வாய்ந்த கோட்டையில் துன் முகமது அலி ருஸ்தாமை கெஅடிலான் கட்சியின் சம்சுல் இஸ்கந்தார் முகமது அகின் தோற்கடித்ததை அன்வார் உதாரணம் காட்டினார்.

மலாக்கா முதலமைச்சராக அப்போது பதவி வகித்த துன் முகமது அலி ருஸ்தாமை சம்சுல் தோற்கடித்தார்.  ஹாங் துவா ஜெயா தொகுதி அம்னோவின் பலம் வாய்ந்த கோட்டையாக விளங்கினாலும் அதனை அவரால் வெற்றி கொள்ள முடிந்தது என்று அன்வார் மேலும் சொன்னார்.

அதே போல் எதிர்க்கட்சிகளால் வெல்ல முடியாத லேடாங் நாடாளுமன்றத் தொகுதியையும் நம்மால் வெற்றி கொள்ள முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :