ECONOMYSELANGOR

உலு சிலாங்கூரில் லைசென்ஸ் இன்றிச் செயல்படும் 4,807 வர்த்தக மையங்கள் மீது நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 3- புக்கிட் செந்தோசா மற்றும் புக்கிட் பெருந்தோங்கில் உள்ள சட்டவிரோத வர்த்தக மையங்களைக் கண்காணிக்கும் பொறுப்பை ஐந்து துறைகளுக்கு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் வழங்கியுள்ளது.

அமலாக்கத் துறை, நகரத் திட்டமிடல் துறை, மேம்பாட்டு துறை, சொத்து மற்றும் நிர்வாக மதிப்பீட்டு துறை, லைசென்ஸ் துறை ஆகியவையே அந்த ஐந்து துறைகளாகும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.

காலியாக உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வர்த்தக மற்றும் தொழிலியல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகப் பணிக்குழு ஒன்றை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் அண்மையில் அமைத்துள்ளதாக அவர் சொன்னார்.

மொத்தம் 4,807 வர்த்தக மையங்கள் லைசென்ஸ் இன்றிச் செயல்படுவதைத் தரவுகள் காட்டுகின்றன. அவற்றில் 2,259 மையங்கள் புக்கிட் செந்தோசாவிலும் எஞ்சிய 2,548 மையங்கள் புக்கிட் பெருந்தோங்கிலும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமான முறையில் வணிகம் புரிகின்ற மற்றும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியுள்ள உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அனுமயின்றி கட்டிடங்களை மாற்றியமைத்தவர்கள், வியாபாரப் பொருள்களைக் கடையின் ஐந்தடியில் வைப்பவர்கள், அனுமதியின்றி மழைக்குருவி வளர்ப்பவர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :