ECONOMYHEALTHNATIONAL

“பிக்கிட்ஸ்“ திட்டத்திற்குக் கூடுதலாக 412 தடுப்பூசி மையங்கள்- சுகாதார அமைச்சு ஏற்பாடு

கோலாலம்பூர், மார்ச் 3- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ்க் கூடுதலாக 412 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வருகைக்கான முன்பதிவின்றி நேரில் சென்று தடுப்பூசி  பெறுவோரின் வசதிக்காக இந்தக் கூடுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கிய பள்ளி விடுமுறையை முன்னிட்டு இந்தக் கூடுதல் தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

ஐந்து முதல் 11 வயது வரையிலான தங்கள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி பெறுவதற்கான தேதியை  இன்னும் பெறாத பெற்றோர்கள் இந்தப் பள்ளி விடுமுறையைப் பயன்படுத்தி அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட தடுப்பூசி மையங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி கோட்டா முடிந்து போகும் பட்சத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மறுநாள் அழைத்து வந்து தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம் அல்லது மைசெஜாத்ரா செயலியில் வருகைக்கான முன்பதிவைச் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

சிறார்களுக்கு தடுப்பூசி பெறுவதற்கு மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்துள்ள பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் தடுப்பூசியை  பெறுவதற்கான தேதி மற்றும் இடத்தை தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக அந்த செயலியில் இணைப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில 26.2 விழுக்காட்டினர் அல்லது 929,733 பேர் நேற்று வரை  முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.


Pengarang :