ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயைத் தொற்று நோய் பட்டியலில் சேர்ப்பீர்- கியூபெக்ஸ் பரிந்துரை

கோலாலம்பூர், மார்ச் 7- பொதுச் சேவை சுற்றறிக்கையில் கோவிட்-19 நோயைத் தொற்று நோயாகப் பட்டியலிடுவதற்கான சாத்தியத்தைப் பரிசீலிக்கும்படி அரசு ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளைக் கவனிப்பதற்கு ஏதுவாகப் பெற்றோர்கள் தனிமைப்படுத்துதல் விடுமுறையை எடுப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று கியூபெக்ஸ் டத்தோ அட்னான் மாட் கூறினார்.

தங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அறிகுறி இல்லா நோய்த் தொற்று கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்த தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பெற்றோர்கள் ஐந்து நாள் தனிமைப்படுத்துதல் விடுமுறையைப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

மேற்கண்ட தரப்பினர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்று சுகாதார அமைச்சின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஒ.பி.) கூறுகிறது.

அதே சமயம், கை,கால்,வாய்ப்புண் நோய், டிங்கி காய்ச்சல், அம்மை, மலேரியா, போன்ற நோய்களால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்குத் தனிமைப்படுத்துதல் விடுமுறை வழங்கப்படுவதாக 2016 ஆம் ஆண்டு 11வது எண் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கோவிட்-19 நோய்த் தொற்று அந்தப் பட்டியலில்  சேர்க்கப்படவில்லை.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை குழந்தை பராமரிப்பாளர்களிடம் ஒப்படைக்க முடியாது என்பதால் பெற்றோர்களே அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆகவே, பிள்ளைகள் குணமாகும்வரை தாய் அல்லது தந்தைக்கு தனிமைப்படுத்தும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று கியூபெக்ஸ் பரிந்துரைக்கிறது என்று அட்னான் தெரிவித்தார்.


Pengarang :