ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூர் அரசின் வெ.1,000 பரிசுத் தொகை – முதலாம் ஆண்டு உயர்கல்விகூட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், மார்ச் 7- ஐயாயிரம் வெள்ளிக்கும் குறைவாக மாதம் வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 1,000 வெள்ளி உயர்கல்விக் கூடப் பரிசுத் தொகைக்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் இளங்கலை, டிப்ளோமா, நான்காம் நிலை தொழில்திறன் சான்றிதழ் கல்வியைப் பெறும் முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த உயர்கல்விக் கூடப் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிலாங்கூர் மாநில அரசு செயலகம் கூறியது.

இம்மாதம் முதல் தேதி தொடங்கி வரும் 31 ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அது தெரிவித்தது.

இந்தப் பரிசுத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய  http://hpipt.selangor.gov.my/  என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள். மேல் விபரங்களுக்கு 03-55447385 அல்லது 03-55215523,” என்ற எண்களில் உயர்கல்விக் கழகப் பரிசுத் தொகை செயலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என அச்செயலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது.

சிலாங்கூரில் பிறந்த அல்லது 11 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் வசித்து வருவோர் இந்த நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம் என அச்செயலகம் வெளியிட்ட விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தி நிதியுதவித் திட்டம் அமல் செய்யப்பட்டு வருகிறது.


Pengarang :