ECONOMYHEALTHNATIONAL

வாய், நாசி வழி தடுப்பூசியைச் செலுத்தும் முறையை மேம்படுத்துவதில் மலேசியா தீவிரம்

கோலாலம்பூர், மார்ச் 7- கோவிட்-19 தடுப்பூசியை வாய் வழியாக அல்லது நாசியில் ஸ்ப்ரே செய்வதன் வாயிலாகச் செலுத்துவதற்கான வழிமுறையை மலேசியா பி.பி.வி.என். எனப்படும் தேசியத் தடுப்பூசி மேம்பாட்டு வரைபடப் பாதை திட்டத்தின் வாயிலாக மேம்படுத்தி வருகிறது.

பலரிடம் இன்னும் காணப்படும் ஊசியைக் கண்டு அஞ்சும் போக்கு தடுப்பூசியைப் பெறுவதில் இடையூறாக உள்ளதால் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான மாற்று வழிகள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றன என்று அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் துறை துணையமைச்சர் டத்தோ அகமது அஸ்மாட் ஹஷிம் கூறினார்.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளில் தடுப்பு மருந்தை வாய் வழியாகச் செலுத்தும் அல்லது நாசியில் தெளிப்பது உள்ளிட்ட வழி முறைகள் ஆராயப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் ஈப்போ தீமோர் உறுப்பினர் வோங் கா வோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் மட்டும் பி.பி.வி.என். கவனம் செலுத்தவில்லை எனக் கூறிய அவர், மாறாக, மனிதர்களுக்குத் தேவையான இதர தடுப்பூசிகளை மேம்படுத்தும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகிறது என்றார்.
தற்போதைக்கு மிருகங்களுக்கான மருந்துகளைத் தயாரிப்பதில் மட்டுமே மலேசியா ஆற்றல் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் தயாரிக்கப்படும் சில தடுப்பூசிகள் மருந்தகச் சோதனைக்கு முந்தைய கட்டத்தைக் கடந்து விட்டதாகவும் அவை விரைவில் மனிதர்களிடம் சோதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிப்படி பார்த்தால் வரும் 2024 ஆம் ஆண்டில் நாம் முதலாவது கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்கி விடுவோம் என்றார் அவர்.

 


Pengarang :