ANTARABANGSAECONOMY

உலக முதலீட்டாளர்களிடம் சிலாங்கூரின் ஆற்றலை மெய்ப்பிக்கும் களமாகத் துபாய் 2020 கண்காட்சி விளங்கும்

ஷா ஆலம், மார்ச் 8- துபாய் 2020 கண்காட்சியில் இடம் பெறும் மாநில அரசின் “சிலாங்கூர் வாரம்“ நிகழ்வு மலேசியா, மற்றும் பிராந்திய அளவில் முதன்மை மையமாகச் சிலாங்கூர் விளங்குவதை அனைத்துலக முதலீட்டாளர்களுக்கு நிரூபிக்கும்.

இம்மாதம் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த  நிகழ்வின் போது 192 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் 120 வர்த்தக சந்திப்புகளை சிலாங்கூர் பேராளர் குழுவினர் நடத்துவர் என்று வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

சிலாங்கூர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரு அனைத்துலக விமான நிறுவனங்கள் மற்றும் ஆசியானின் இரண்டாவது பெரிய கொள்கலன் துறைமுகம் (போர்ட்கிள்ளான்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் நாட்டிலுள்ள இதர பொருளாதார மையங்களுடன், இரயில், சாலை மற்றும் ஆகாய மார்க்கமான தொடர்புகளையும் அது கொண்டுள்ளது.

இதுவே ஆசியான் மற்றும் அனைத்துலக முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடிய மாநிலத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

இது தவிரச் சிலாங்கூர் 36 லட்சம் மனித ஆற்றலைக் கொண்டுள்ளது.

இத்தொழிலாளர்களில் பெரும்பாலோர் திறன் மிக்கவர்களாகவும் பன்மொழி பேசும் வல்லமை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர் என்று நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  அவர். தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் உரிய தளமாக இந்தக் கண்காட்சியை மாநில அரசு கருதும் காரணத்தால் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவது தொடர்பில் அது இலக்கு எதனையும் நிர்ணயிக்கவில்லை அது நிர்ணயிக்கவில்லை என்றார் அவர்.

 


Pengarang :