ECONOMYNATIONAL

ஜோகூர் தேர்தல்- தொடக்கக் கட்ட வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கியது

ஜோகூர் பாரு, மார்ச் 8- ஜோகூர் மாநிலத்தின் 15வது தேர்தலுக்கான தொடக்கக் கட்ட வாக்களிப்பு இன்று  காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. இந்த வாக்களிப்பு பணிக்காக 63 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மலேசியப் ஆயுதப்படை, அரச மலேசிய போலீஸ் படை, பொது நடவடிக்கைப் பிரிவு ஆகிய பாதுகாப்பு படைகளில் (பி.ஜி.ஏ.) பணியாற்றும் 22,000 வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவியார் இந்தத் தொடக்கக் கட்ட வாக்களிப்பில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளனர்.

இங்கு ஜாலான் தெப்ராவிலுள்ள ஜோகூர் மாநிலப் போலீஸ் தலைமையகம், மாநிலம் முழுவதும் உள்ள 10 மாவட்டப் போலீஸ் தலைமையகங்கள் மற்றும் சில அரசாங்க அலுவலகங்கள் வாக்களிப்பு மையங்களாகச் செயல்படுகின்றன.

இராணுவ வீரர்களுக்கான வாக்களிப்பு குளுவாங், மக்கோத்தா முகாம், உலுதிராம், தெப்ராவ் முகாம், பத்துப் பகாட் அரச மலாய் இராணுவப் படைப்பிரிவின் 10 வது முகாம், சிகாமாட், அரசப் பீரங்கிப் படையின் நான்காவது பட்டாள முகாம் ஆகியவற்றில் நடைபெறும்

இதனிடையே, பி.ஜி.ஏ. உறுப்பினர்களும் அவர்தம் துணைவியாரும் சிம்பாங் ரெங்கம் 5வது படைப்பிரிவு மற்றும் மூவார் 6வது படைப் பிரிவு முகாம்களில் வாக்களிக்கவுள்ளனர்.
இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளுக்கு 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


Pengarang :