ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயாளிகளில் 188 பேருக்கு மட்டுமே கடும் பாதிப்பு- நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், மார்ச் 8- நாட்டில் நேற்று பதிவான 26,856 நோய்த் தொற்று சம்பவங்களில் 188 மட்டுமே கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய 26,668 சம்பவங்கள்  நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று அவர் சொன்னார்.
நேற்றைய புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 49 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட 188 கோவிட்-19 நோயாளிகளில் 63 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்களாவர். மேலும் 80 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருப்பவர்கள். எஞ்சிய 45 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றவர்களாவர் என்றார் அவர்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களில் 103 பேர் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் 83 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் மேலும் ஒருவர் கர்ப்பிணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 725 பேர் அல்லது 38.8 விழுக்காட்டினர்  மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் 1,144 பேர் அல்லது 61.2 விழுக்காட்டினர் லேசான நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 368 கோவிட்-19 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 223 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :