ECONOMYNATIONAL

மலேசியா எண்டமிக் கட்டத்திற்கு மாறுகிறது- ஏப்ரல் முதல் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்படுகின்றன

கோலாலம்பூர், மார்ச் 9- மலேசியா எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இடர் மதிப்பீட்டை மேற்கொண்டு, சுகாதார அமைச்சின் கருத்துகளைக் கேட்டறிந்து நால்வர் அடங்கிய அமைச்சர் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த ஈராண்டுகளாகக் கோவிட்-19 பெருந்தொற்றுடன் போராட்டம் நடத்திய பின்னர் ஏறக்குறைய இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்புவதற்கான வெளியேற்ற வியூகமாக இந்த எண்டமிக் கட்டத்திற்கான மாறுதல் அமைக்கிறது என்பதை அறிவிப்பது எனது கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கடந்த 2020 மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மற்றும் வருகையாளர்களுக்கு நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன.

நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பிரதமர் அறிவித்தார்.

-பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்ந்து அமலில் இருக்கும்.

-வணிக மையங்களுக்கான நேரக் கட்டுப்பாடு அகற்றப்படுகிறது.

– லைசென்சில் குறிப்பிட்டுள்ள நேரப்படி வணிகர்கள் வியாபாரத்தை மேற்கொள்ளலாம்.

– மைசெஜாத்ரா செயலியில் பதிவிடுவது இன்னும் கட்டாயத்தில் உள்ளது. பொது இடங்கள், நெரிசல் இல்லாத இடங்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.

-பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களில் சமய நடவடிக்கைகளை கூடல் இடைவெளியின்றி மேற்கொள்ளலாம். எனினும், சமய அதிகாரிகள் நிர்ணயிக்கும் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். முஸ்லீம் அல்லாதோருக்கான வழிபாட்டுத் தலங்களில்  ஒற்றுமைத் துறை அமைச்சு, இதர சமய விவகாரம் பிரிவின் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

– தடுப்பூசி பெற்றவர்களை அடிப்படையாக கொண்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பான வரையறை அகற்றப்படுகிறது. தடுப்பூசி பெற்றவர்கள், பெறாதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் மாநில எல்லை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.


Pengarang :