ECONOMYHEALTHSELANGOR

திங்களன்று சட்டமன்றக் கூட்டம்- நோய்த் தொற்றிலிருந்து  பாதுகாப்பாக இருப்பீர்- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை

ஷா ஆலம், மார்ச் 9- வரும் திங்கள்கிழமை சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் நோய்த் தொற்றிலிருந்து தாங்கள் விடுபட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்படாமலும் வரும் 25 ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு நடைபெறும் கூட்டத் தொடரில் கலந்து விவாதங்களில் பங்கேற்பதற்கு ஏதுவாகவும் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகச் சட்டமன்றச் சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சிலாங்கூரைச் சேர்ந்த அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அவைக்கு வரமுடியாத சூழல் ஏற்படக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைவரும் முன்கூட்டியே கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், மரியாதை அணிவகுப்பு மற்றும் அரச விருந்து நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தினமும் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படலாம் என ஊடகங்கள் முன்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :