ECONOMYHEALTHNATIONAL

பொறுத்திருந்து பார்க்கும் காலம் முடிந்து விட்டது- பிள்ளைகளுக்குத் தடுப்பூசியை விரைந்து பெறுவீர்- கைரி வலியுறுத்து

ஷா ஆலம் மார்ச் 9- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்குக்  கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வரை 16 லட்சத்து 30 ஆயிரம் முன்பதிவு அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும் பத்து லட்சம் சிறார்கள் மட்டுமே இதுவரை தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட 119,719 சிறார்கள் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், குறைந்த எண்ணிக்கையிலான சிறார்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் சொன்னார்.

சிறார்கள் மத்தியில் கோவிட்-19 பரவல் அதிகமாக உள்ளதால் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்யும்படி பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பொறுத்திருந்து பார்க்கும் காலம் முடிவுக்கு வந்து விட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான தீர்க்கமான முடிவை அவர்கள் எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே, ஐந்து வயதுக்கும் குறைவான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்துக் கருத்துரைத்த அமைச்சர், அத்தரப்பினருக்கு இதுவரை எந்தத் தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படவில்லை என்றார்.


Pengarang :