ECONOMYNATIONAL

ஜனவரி மாதம் நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்தது

கோலாலம்பூர், மார்ச் 10- நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் 680,400 ஆகக் குறைந்து 4.2 விழுக்காடாகப் பதிவாகியுள்ளதாக மலேசியப் புள்ளிவிபரத் துறை கூறியது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பதிவான 687,600 பேருடன் ஒப்பிடுகையில் இது 1.1 விழுக்காடு குறைவாகும் என்று புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்  முகமது ஊஸீர் மஹிடின் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் ஆள்பலத் துறையின் நிலை மேம்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புகள் அதிகரித்து வரும் அதே வேளையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் சரிவு கண்டு வருகிறது என்றார் அவர்.

2022 ஜனவரி மாதத்திற்கான மலேசிய ஆள்பலத் தரவு அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் வேலை செய்வோரின் எண்ணிக்கை 0.2 விழுக்காடு அதிகரித்து 1 கோடியே 56 லட்சத்து 90 ஆயிரம் பேராக பதிவாகியுள்ளது. கடந்தாண்டு ‘டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரமாக இருந்தது என்று அவர் மேலும் சொன்னார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் நாட்டின் பொருளாதாரம் ஊக்கமூட்டும் வகையில் உள்ளதை இது பிரதிபலிக்கிறது. அனைத்து மாநிலங்களும் தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் உள்ளன. இதன் காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் முழு அளவில் கூடுதல் நேரம் செயல்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :