ECONOMYHEALTH

கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் உச்சவரம்பு விலை மறுஆய்வு- அமைச்சு பரிசீலனை

கோலாலம்பூர், மார்ச் 10- மக்களின் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகத் தற்போது விளங்கி வரும் கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின்  உச்சவரம்பு விலையை மறுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கோவிட்-19 ஆண்டிஜென் ரெப்பிட் டெஸ்ட் கிட் (ஆர்.டி.கே.) எனப்படும் அந்தச் சோதனைக் கருவியை விநியோகக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ்க் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக அரசாங்கம் கடந்தாண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஆர்ஜிதம் செய்து டிசம்பர் 1 ஆம் தேதி நடை முறைப்படுத்தியதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி  கூறினார்.

பயனீட்டாளர்களின் தேவை மற்றும் நலனில் அரசாங்கம் எப்போதும் அக்கறை கொள்கிறது. இதன் அடிப்படையில் முகக் கவசங்கள் மற்றும் சுயப் பரிசோதனை கருவிகள் சந்தையில் போதுமான அளவு இருப்பதையும் அதன் விலை சுமையைத் தராமலிருப்பதையும் அது உறுதி செய்து வருகிறது என்றார் அவர்.

இதன் அடிப்படையில் அந்த பொருள்களின் மீது உற்பத்தி, மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை என அனைத்து நிலைகளிலும் அமைச்சின் அமலாக்கப் பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்  என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

தற்போது மிகவும் அத்தியாவசியப் பொருள்களாக விளங்கி வரும் முகக் கவசங்கள், சுயப் பரிசோதனைக் கருவிகள், ஆக்சிமீட்டர், டெர்மாமீட்டர் ஆகியவற்றின் உச்சவரம்பு விலையை குறைக்கும் சாத்தியம் உள்ளதா என்று ராசா உறுப்பினர் சா கீ சின் கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :