ALAM SEKITAR & CUACASELANGOR

நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா 10,000 வெள்ளி உடனடி உதவி- மந்திரி புசார் அறிவிப்பு

அம்பாங் ஜெயா, மார்ச் 11- இங்குள்ள தாமான் புக்கிட் பெர்மாய் 2 பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண உதவியாகத் தலா 10,000 வெள்ளியை மாநில அரசு வழங்கும்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு உதவி நிதி முன்னதாக ஒப்படைக்கப்படும் வேளையில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்குப் பின்னர் உதவிகள் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த மண்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10,000 வெள்ளி நிவாரணத் தொகையை வழங்குவதில் தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த இயற்கைப் பேரிடரில் பாதிப்புக்குள்ளான மற்ற குடியிருப்பாளர்களுக்கு எத்தகைய உதவிகளை வழங்குவது என்பது குறித்து ஆராயவுள்ளோம்.  மக்கள் குடியிருப்பதற்கு இப்பகுதி பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வதுதான் தற்போதைய தலையாய பணியாகும் என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருகை மேற்கொண்ட பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக அவர், இச்சம்பவம் தொடர்பில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வழங்கிய விளக்கமளிப்பைக் கேட்டறிந்தார்.

அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2 குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நால்வர் உயிரிழந்ததோடு 15 வீடுகளும் 10 கார்களும் சேதமுற்றன.


Pengarang :