ALAM SEKITAR & CUACANATIONAL

மலேசியாவில் அடுத்த வாரம் பருவ நிலை மாற்றம்- வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வருகிறது

கோலாலம்பூர், மார்ச் 11- வரும் திங்கள் கிழமை முதல் மே மாத மத்தியப் பகுதி வரை மலேசியா பருவமழை மாற்றத்தை எதிர்கொள்கிறது. இதன் வழி கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் நிலவி வந்த வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வருகிறது.

இந்தப் பருவ மழை கட்டத்தின் போது நாட்டின் பிராந்தியங்கள் பல்வேறு திசைகளிலிருந்து பலவீனமான காற்றை எதிர்கொள்ளும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி அப்துல்லா கூறினார்.

இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கும் குறுகிய நேரத்திற்குப் பலத்த காற்று வீசுவதற்கும் இந்தப் பருவ மழை மாற்றம் சாதகமாக அமையும் என்று அவர் சொன்னார்.

மேற்கு கரை மாநிலங்கள், தீபகற்ப மலேசியாவின் உட்புறப் பகுதிகள், மேற்கு சபா, மேற்கு மற்றும் மத்தியச் சரவா ஆகிய இடங்களில் மாலை வேளைகளிலும் முன்னிரவிலும் இந்நிலை நீடிக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த வானிலை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கும் பலவீனமான கட்டுமானங்களுக்கு பழுது ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் வானிலை தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வரும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.


Pengarang :