ECONOMYNATIONAL

வாக்காளர்கள் துணிவுடன் மாற வேண்டும்- கெஅடிலான், ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டும்- அன்வார் வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 11– நாளை ஜோகூர் மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பக்கத்தான் ஹராப்பானின் மூன்று முக்கியத் தலைவர்கள் பெரிய அளவில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் கோத்தா இஸ்கந்தாரில் நடைபெற்ற மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கெஅடிலான் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்படி வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் அமானா கட்சித் தலைவர்  முகமது சாபு மற்றும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கலந்து கொண்டதாகக்  கெஅடிலான் தலைவர் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நாட்டில் இன ஒற்றுமைக்கு ஒரு போதும் பங்கம் வராமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

தங்களின் எதிர்காலம் மற்றும் ஜோகூர் மாநிலத்தின் நலன் கருதி மாநில மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய துணிச்சலான முடிவை எடுப்பார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் கெஅடிலான் கட்சி தனது பாரம்பரியச் சின்னத்தில் போட்டியிடும் வேளையில் அமானா மற்றும் ஜசெக ஆகியவை ஹராப்பான் சின்னத்தில் களம் காண்கின்றன.

இதனிடையே, இந்தத் தேர்தலில் கெஅடிலான் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்கள் மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதோடு கடந்த பொதுத் தேர்தலில் வென்ற பல தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று மெர்டேக்கா சென்டர் நிர்வாக இயக்குநர் இப்ராஹிம் சுப்பியான் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலைப் போல் அதிகத்  தொகுதிகளை வெல்வது இம்முறை சாத்தியமில்லை. எனினும் சீன வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கெஅடிலான் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

அக்கட்சிகளுக்கு மலாய்க்கார ர் அல்லாதோரின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆயினும் வாக்களிக்க வருவோரின் எண்ணிக்கை குறைந்தால் நிலைமை தலைகீழாக மாறி விடும் என்று அவர் சொன்னார்.


Pengarang :