ECONOMYNATIONAL

பேராசை பிடித்த அரசியல்வாதிகளை நிராகரித்துத் துன்பத்தில் கைகொடுக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பீர்

ஜோகூர் பாரு, மார்ச் 12- மக்களுக்கு உண்மையாகச் சேவையாற்றும் மற்றும் துன்பத்தில் இருக்கும் போது கைகொடுக்கும் தலைவர்களை ஜோகூர் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேராசை பிடித்த மற்றும் மக்கள் நலனைப் பொருட்படுத்தாத தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மக்கள் தொடர்ந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.

நகர்ப்புறங்களில் கோழி, காய்கறிகள், முட்டை விலை உயர்கிறது. கிராமப்புறங்களில் தோட்டக்காரர்கள் உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலையேற்றத்தினால் தவிக்கின்றனர்.

இந்தப் பிரச்னைகளுக்கு ரஷிய-உக்ரேன் போர் காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது.

ரஷியப் போர் சில வாரங்களுக்கு முன்னர்தான் தொடங்கியது.  ஆனால், பொருள்களின் விலையேற்றம் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் உள்ளது. இவ்வாறான நிலையில் அவர்களுக்கு வாக்களித்து என ஆகப்போகிறது என்று அன்வார் கேள்வியெழுப்பினார்.

நேற்று மாலை லார்க்கின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர் இவ்வாறு சொன்னார்.

மக்களுக்கு உதவும் விஷயத்தில் நேரத்திற்கு ஒரு பேச்சு பேசும் தலைவர்களை மக்கள்  நிராகரிக்கவும் தண்டிக்கவும் வேண்டும்  என்றும் அவர் கூறினார்.

தலைவர்களாக இருப்பவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண ஏதாவது ஒன்றைச் செய்தாக வேண்டும். முன்பு டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் பயனீட்டாளர் விவகார அமைச்சராக இருந்த போது களத்தில் இறங்கிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தீவிரம் காட்டினார்.

சிலாங்கூரில்கூடக் கோழி விலை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு நிச்சயம் உள்ளது. ஆகவே, மாற்றத்திற்காகச் சிந்திக்கும்படி வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

கடந்த 2018 இல் நடைபெற்ற 14 பொதுத் தேர்தலின் போது கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்ட பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி ஜோகூர் மாநிலத்தில் 36 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு 19 இடங்களும் பாஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தன.

எனினும், 22 மாதங்களுக்கு பின்னர் நடந்த கட்சித் தாவல் படலம் காரணமாக பக்கத்தான் கூட்டணியின் பலம் 27 ஆக குறைந்து ஆட்சியைப் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது.

 


Pengarang :