ECONOMYNATIONALSELANGOR

வெள்ளப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பீர்- மத்திய-மாநில அரசுகளுக்குச் சுல்தான் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 14- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுச் செயல்படும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளப் பேரிடர் ஏற்படும் போது அதில் சிக்கிக் கொள்ளும் மக்கள் கடுமையான பாதிப்பையும் துன்பத்தையும் எதிர்நோக்காமலிருப்பதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.

வெள்ளத்திற்குப் பின்னர் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கண்டபோது நான் உண்மையில் வேதனையும் கவலையும் அடைந்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதில் அனைத்து தரப்பினரும் அக்கறையின்றியும் அலட்சியப் போக்குடனும்  தொடர்ந்து இருந்து வந்தால் அரசாங்கம் மட்டுமின்றி மக்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்றார் அவர்.

இன்று இங்கு 14 வது சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் சுல்தான் இவ்வாறு கூறினார்.


Pengarang :