ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் 90% பெரியவர்கள் தடுப்பூசி பெற்றனர்- எஸ்.ஒ.பி.யை கடைபிடிக்கச் சுல்தான் அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 14- கோவிட்-19 தடுப்பூசியை அதிகப்பட்ச எண்ணிக்கையில் அதாவது 90 விழுக்காட்டிற்கும் மேல் செலுத்திக் கொண்டதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மாநில மக்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எனினும், எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்தில் நுழைவதற்கு ஏதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையான நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) தொடர்ந்து கடைபிடிக்கும்படி பொது மக்களைச் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  கேட்டுக் கொண்டார்.

பெருந்தொற்றுக்கு பிந்தைய வாழ்க்கையில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகிறது. சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் தடுப்பூசித் திட்டம் தவிர்த்து மாநில அரசும் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநிலத் தடுப்பூசித் திட்டத்தை  அமல்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டம், தொழில்துறை சார்ந்தவர்களுக்கான செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டம் தவிர்த்து மூத்த குடிமக்களுக்கான செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தையும் மாநில அரசு அமல் செய்துள்ளது என்றார் அவர்.

இன்று இங்கு 14 வது சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில்  அவர் இதனைக் கூறினார்.


Pengarang :