ECONOMYSELANGOR

வெ. 227 கோடி வரி வசூல்- சிலாங்கூர் அரசின் அடைவு நிலைக்குச் சுல்தான் பாராட்டு

ஷா ஆலம், மார்ச் 14– சிலாங்கூர் வசிப்பதற்கு உகந்த இடமாகவும் முதலீட்டாளர்களின் தேர்வுக்குரிய மையமாகவும் நிலைநிறுத்தும் முயற்சிகள் 2022 வரவு செலவுத் திட்டத்திலும் தொடரப்படுகின்றன.

கடந்தாண்டில் 227 கோடி வெள்ளி வரியை வசூலித்ததன் வாயிலாகச் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு  மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 2022 இல் 205 கோடி வெள்ளி வரியை வசூலிக்க எனது அரசாங்கம் இலக்கு நிர்ணயித்திருந்தது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நீடித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்தக் குறைவான வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், வரி வசூலிப்பை அதிகரிப்பதற்கு ஏதுவாக வருமானத்தை ஈட்டுவதற்குரிய புதிய வளங்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பல்வேறு ஆக்ககரமான நடவடிக்கைகளை எனது அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு 14வது சட்டமன்றத்தின்  5 ஆம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கூட்டத் தொடர் இன்று தொடங்கி இம்மாதம் 25 ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு நடைபெறும்.


Pengarang :