ECONOMYNATIONAL

சுல்தான் உத்தரவுக்கேற்ப விவாதங்களில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை- சபாநாயகர் இங் தகவல்

ஷா ஆலம், மார்ச் 14– மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அவர்களின் உத்தரவுக்கேற்ப அவை உறுப்பினர்கள் விவாதங்களின் போது அரசியலைக் குறைத்துத் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகச் சட்டமன்றச் சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தங்களுக்குள்ள பொறுப்பினை நிறைவேற்றுவதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்ற சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் நினைவுறுத்தலைத் தாம் கவனத்தில் கொள்வதாக லிம் சொன்னார்.

மேன்மை தங்கிய சுல்தானின் உத்தரவை ஏற்றுத் தங்கள் தொகுதி பிரச்னைகள் மற்றும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் விவகாரங்களுக்கு விவாதங்களின் போது முக்கியத்துவம் அளிக்கும்படி சட்டமன்றச் சபாநாயகர் என்ற முறையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

அரசியல் குறித்தும் கட்சி பற்றியும் அதிகம் பேசினால் மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டு விடும். சவால்மிக்க பொருளாதாரச் சூழலில் மக்கள் தற்போது உள்ளனர். அவர்களுக்குச் சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியும் பரிவும் தேவைப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

பதினான்காவது சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரின் தொடக்க  நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, சட்டமன்ற கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றிய சுல்தான், தங்கள் தொகுதியில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் கவனம் செலுத்தும்படி அவை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :