ECONOMYNATIONAL

இந்தோ. பணிப்பெண்கள் தருவிப்பு-  புரிந்துணர்வு ஒப்பந்தம் இவ்வாரம் கையெழுத்தாகும்

கோலாலம்பூர், மார்ச் 15 –  வீட்டுப் பணிப் பெண்களைத் தருவிப்பது தொடர்பில் மலேசியாவும்  இந்தோனேசியாலும் இந்த வாரம்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திடும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சின் சார்பில் மக்களவையில் இன்று மாமன்னரின்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தை நிறைவு செய்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கு இந்தோனேசிய தலைநகர்  ஜாகர்த்தாவில்  நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இந்தோனேசியப் பணிப்பெண்களை மலேசியாவுக்கு தருவிப்பது மற்றும் பணியமர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் தொடர்பில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவிருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்திடும் சடங்கு ஒத்திவைக்கப்பட்டதால் அப்பேச்சுவார்த்தை முழுமை பெறாமல்  போனதாக  ஊடகங்கள் தெரிவித்தன.

இதனிடையே, கடந்த ஆண்டு உள்நாட்டு முதலீடுகள் மூலம் மொத்தம் 148,300 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார். அவற்றில் 109,605 அல்லது 73.9 சதவீத வேலைகள் திறன் மற்றும் பகுதி திறன்  கொண்ட பிரிவுகளைச் சேர்ந்தவை என அவர் சொன்னார்.

இருப்பினும், 3டி எனப்படும்  அழுக்கான, ஆபத்தான மற்றும் கடினமான வேலைகளுக்கு உள்ளூர் தொழிலாளர்கள் கிடைப்பது கடினமாக உள்ளதாக கூறிய அவர்,  இதனால் அரசாங்கம் இத்துறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கிறது என்றார்.


Pengarang :