ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 தொற்று கண்ட சிறார்களுக்கு நீரிழிவு நோய் அபாயம் அதிகரிப்பு- மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 15 – கோவிட்-19  நோய்த் தொற்று கண்ட சிறார்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம் என்பது அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு மருத்துவ வட்டாரங்களில் சிறார் ஆரோக்கியம் மீதான எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து மீண்ட 18 வயதிற்குட்பட்ட சிறார்கள், நோய்த் தொற்று பீடிக்காதவர்களைக் காட்டிலும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதற்கு அதிக சாத்தியத்தை கொண்டிருப்பதை டாக்டர் ஷரோன் ஷாய்டா தலைமையிலான  அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி.) ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கடந்த ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த சி.டி.சி. யின் முடிவுகளைக் கண்டு மலேசியா கவலையுறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. கோவிட்-19 நோய்த் தொற்றின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பு காரணமாக  தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை 94 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு இம்மாதம் 12 ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவில் சமீபகாலமாக குழந்தைகள் மத்தியில் 1 ஆம் வகை நீரிழிவு நோய் அதிகரித்து வருவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாத சிறார்களுடன் ஒப்பிடுகையில் அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 166 விழுக்காடு அதிகமாக இருப்பதாக சி.சி.சி. ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று பரவலுக்கு முன்னர் கடுமையான சுவாசப் பிரச்னையை எதிர்நோக்கியிருந்தவர்களைக் காட்டிலும் கோவிட்-19 நோய் கண்டவர்கள் மத்தியில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 116 விழுக்காடு அதிகம் உள்ளதையும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 நோய்த் தொற்று உச்சத்தில் இருந்த போது இங்கிலாந்தில் 1 ஆம் வகை நீரிழிவு நோயினால் பீடிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை உயர்வு கண்டதாக மெடிக்கல் ஜெர்னல் டயாபடிஸ் கேர் எனும் மருத்துவ சஞ்சிகை கூறியது.


Pengarang :