ALAM SEKITAR & CUACANATIONAL

பருவமழை மாற்ற எச்சரிக்கை- விழிப்புடன் இருக்கப் பொதுக்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர் , மார்ச் 15- பருவமழை மாற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்துள்ள எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளும்படி பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று தொடங்கி வரும் மே மாதம் மத்தியப் பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் பருவமழை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை உதவும் என்று சுற்றுச் சூழல் மற்றும் நீர் வள அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

நீண்ட நேரத்திற்குக் கனத்த மழை பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழையைக் காட்டிலும் இந்தப் பருவமழை மாற்றம் முற்றிலும் மாறுபட்டது எனக் கூறிய அவர், இதனால் குறுகிய நேரத்திற்கு அதாவது மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய அடைமழையும், பலத்த காற்றும் வீசும் என்றார்.

வடகிழக்கு பருவமழையைப் பொறுத்த வரை நீண்ட நேரத்திற்கு மழை பெய்யும். மழையின் அளவு அதிகமாக இருப்பதன் அடிப்படையில் நாம் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்க முடியும்.

இந்த பருவமழை மாற்றத்தின் போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மழை பெய்யும். இதனால் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

மக்களவையில் இன்று தும்பாட் தொகுதி பாஸ் கட்சி உறுப்பினர் டத்தோ சே அப்துல்லா மாட் நாவி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :