ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் அரசின் வேலை வாய்ப்பு பயணத் திட்டம் வேலையில்லாப் பிரச்னையைக் குறைக்க உதவுகிறது

ஷா ஆலம், மார்ச் 15– சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு பயணத் திட்டம் மாநிலத்தில்  வேலையில்லாப் பிரச்னையைக் குறைக்க உதவியுள்ளது.

கடந்த 2020 மூன்றாம் காலாண்டில் 132,000 ஆக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை கடந்த 2021 நான்காம் காலாண்டில் 2.9 விழுக்காடு குறைந்து 105,300 ஆக ஆனதாக  மனித மூலதன மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

வேலையில்லாப் பிரச்னையைக் கட்டுப்படுத்துவதில் புத்ரா ஜெயாவுக்கு அடுத்துச் சிறப்பாகச் செயல்படும் நாட்டின் இரண்டாவது மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குவதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டு முழுவதும் ஷா ஆலம், கோலச் சிலாங்கூர், கோலக் குபு பாரு, உலு லங்காட், சுங்கை பூலோ ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிலாங்கூர் வேலை வாய்ப்பு பயணத்திட்டத்தின் வாயிலாக இந்த அடைவு நிலை பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூரில் வேலையில்லாப் பிரச்னை குறைந்த அளவில் உள்ளது. இது சிறப்பான நிலையைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று மெலாவாத்தி உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே,  வரும் ஜூன் மாதம் மாநிலத்தில் பெரிய அளவில்  வேலை வாய்ப்புச் சந்தையை மாநில அரசு நடத்தவுள்ளதாகவும் அவர் கைருடின் சொன்னார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 முதலாளிகள் பங்கேற்கும் இந்த சந்தையில் 25,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :