ECONOMYHEALTHNATIONAL

மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகள் சிறார் தடுப்பூசித் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், மார்ச் 15- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்டு இன்னும் கைவசம் மிகுதியாக இருக்கும் சினோவேக் தடுப்பூசிகள் சிறார் தடுப்பூசித் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்.

கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்டு இன்னும் எஞ்சியிருக்கும் 200,000 தடுப்பூசிகள் காலாவதியாகும் தேதிக்கு முன்னதாகப் பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசித் திட்‘டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 150,000 தடுப்பூசிகள் போக இரண்டு லட்சம் தடுப்பூசிகள் இன்னும் எஞ்சியுள்ளன. சினோவேக் தடுப்பூசியைச் சிறார்களுக்குப் பயன்படுத்தச் சுகாதார அமைச்சு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே, அத்திட்டத்திற்காகத் தடுப்பூசியில் ஒரு பகுதியை ஒதுக்கவிருக்கிறோம் என்றார் அவர்.

மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகள் பயன்படுத்தி முடிக்கப்படாத பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளைச் செல்கேட் ஹெல்த்கேர் சென். பெர்ஹாட் நிறுவனம் கண்டறிந்துள்ளதாக  மாநிலச் சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் இன்னும் தேவை நிலவுவதால் எஞ்சியிருக்கும் தடுப்பூசிகளைப் பிற மாநிலங்களுக்கு அல்லது நாடுகளுக்கு விற்பனை செய்வதும் அந்த மாற்று வழிகளில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

அந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டு காலம் மூன்று ஆண்டுகளாக உள்ளதால் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் கோரிக்கையை ஏற்றுத் தடுப்பூசியை விநியோகிக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மாநில மக்களுக்குச் செலுத்துவதற்காக 20 கோடி வெள்ளி செலவில் மாநில அரசு சினோவேக் தடுப்பூசிகளை  மாநில அரசு கொள்முதல் செய்தது.


Pengarang :